கொரோனா நோயாளிகள் வசதிக்காக  திருப்பூரில் ஆக்சிஜன் பேருந்து அறிமுகம் 

by Editor / 14-05-2021 04:23:19pm
கொரோனா நோயாளிகள் வசதிக்காக  திருப்பூரில் ஆக்சிஜன் பேருந்து அறிமுகம் 



திருப்பூரில் தொண்டு நிறுவனங்களின் சார்பில் வடிவமைக்கப்பட்ட ஆக்சிஜன் பேருந்து, நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 
திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் முழுமையாக நிரம்பி விட்டன. இதனால், சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகள், ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு உதவும் நோக்கில், திருப்பூரை சேர்ந்த யங் இந்தியன்ஸ், சக்தி மருத்துவமனை, எஸ்.என்.எஸ். பள்ளி, திருப்பூர் ரைடர்ஸ் கிளப் ஆகிய அமைப்பினர் இணைந்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்தை வடிவமைத்து வந்தனர். அதன் பணிகள் முடிவடைந்த நிலையில், மாவட்ட அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் சேவைக்காக நிறுத்தப்பட்டது.
இந்த ஆக்சிஜன் பேருந்தில், 5 ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளதால் படுக்கைகள் கிடைக்காத நோயாளிகள் பேருந்தில் இருந்து சிகிச்சை பெற முடியும். மேலும், காற்றோட்ட வசதிக்காக இருக்கைக்கு நேரே மின் விசிறிகளும் பொருத்தப்பட்டு உள்ளன. ஆக்சிஜன் பேருந்து சேவையை  மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்து, தொண்டு அமைப்பினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.

 

Tags :

Share via