முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளில் வகுப்புகள் துவங்கியது
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள் வகுப்புகள் துவங்கியது. முகக்கவசம் அணிந்து உற்சாகத்துடன் மாணவர்கள் வந்தனர்.
கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டில் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் கடந்த மாதம் 8ந்தேதி கலை அறிவியல் கல்லூரிகளில் 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.இதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திங்கள் முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கலை கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கின.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு முதன் முதலாக கல்லூரியில் நேரடி வகுப்புகளுக்கு செல்வதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.கல்லூரி நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.கல்லூரி மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பித்த பின்னரே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு சில மாணவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையாததால் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த மாணவர்கள் இன்று கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் போனது.முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் பூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர்.
வகுப்புகளில் சமூக இடைவெளியை பின்பற்றி 20 முதல் 25 பேர் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஓரியன்டேஷன் வகுப்பு நடத்தப்பட்டது. மாணவர்கள் ஒவ்வொருவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பாடங்களுக்கான அட்டவணை வழங்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. முதல் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு நாளும், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு மறுநாளும் என்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. நேரடி வகுப்புக்கு வராத நாட்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Tags :