வாக்காளர்களுக்கு எடப்பாடி, ஓ.பி.எஸ். வேண்டுகோள்
சட்டமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க, மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது. நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசின் திட்டங்களையும், அரசின் தவறுகளையும் அடித்தட்டு மக்கள் வரை ஆணித்தரமாக கொண்டு சேர்க்கக்கூடிய அமைப்பு உள்ளாட்சி அமைப்பு. அந்த வகையில், 9 மாவட்டங்களுக்கு முழுமையாக ஊரக உள்ளாட்சித் தேர்தல்களும்; 28 வருவாய் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்களும், நாளை (6.10.2021) மற்றும் 9 ந் தேதி ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் மக்கள் பேரியக்கமான, அண்ணா தி.மு.க.விற்கு தேர்தல் என்பது புதிதல்ல. கடந்த காலங்களில் தேர்தல்களை நாம் நேர்மையாகவும், நியாயமான முறையிலும் சந்தித்து மக்களின் ஏகோபித்த பேராதரவைப் பெற்று மக்கள் பணியாற்றி இருக்கிறோம்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், மக்களின் ஏகோபித்த பேராதரவை கழகம் பெற்றிருந்த போதிலும், தொடர்ந்து மக்களை நம்பாமல் தன்னுடைய தில்லுமுல்லு வேலைகளை மட்டுமே பிரதானமாகக் கருதி தேர்தலை சந்தித்த தி.மு.க, எந்தக் காலத்திலும் அவர்களால் நிறைவேற்ற இயலாத, உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை மக்களிடத்திலே அளித்து, அதை மக்கள் முழுவதுமாக நம்பக்கூடிய சூழ்நிலையையும் உருவாக்கி, கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கூறி உள்ளனர்.
Tags :