திருவள்ளுவர் பல்கலை. முன்னாள் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
வருமானத்திற்கு அதிகமாக 20 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அசோகனின் திருவாரூர் மற்றும் வேலூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராகவும் கடந்த 2013 நவம்பர் முதல் 2016 நவம்பர் வரை பணிபுரிந்தவர் அசோகன். அவர் பணியாற்றிய காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றாத 6 பேரை போலி ஆவணங்கள் மூலம் பணியாற்றியதாக கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காததால் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு முன்னாள் இயக்குனர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அசோகன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி அசோகன் மற்றும் அவரால் பணியமர்த்தப்பட்ட 6 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2019ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் அதற்கு பிறகு நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.
மேலும் தேர்வு தாளை வாங்க டெண்டர் விடாமலும், டி.என்.பி.எல்-இல் வாங்காமலும் ராஜஸ்தானில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் வாங்கி அசோகன் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, 6 ஆண்டுகள் மாணவர்கள் எழுதிய பழைய தேர்வு தாளை விற்க டெண்டர் கூறாமல் தன்னுடைய நண்பருக்கு குறைந்த விலைக்கு விற்று முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அசோகன் மீது லஞ்சஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
முறைகேடுகள் மூலமாக வருமானத்திற்கு அதிகமாக 20 கோடி ரூபாய் சொத்துக்களை அசோகன் சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
திருவாரூர் அருகே உள்ள மேல இருக்காட்டூர் மற்றும் வேலூர் விஜயராவ் நகரில் உள்ள அசோகன் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து திருவாரூர் அரசு கலை கல்லூரிக்கு பணி மாறுதல் ஆகிவிட்டு சென்ற அசோகன் மற்றொரு புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :