இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்குகளில்  கியாஸ் விற்பனை; மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜிங்

by Editor / 07-10-2021 04:26:52pm
இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்குகளில்  கியாஸ் விற்பனை; மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜிங்

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி, கியாஸ், பேட்டரி சார்ஜிங் கிடைக்கும் மையங்களாக, பெட்ரோல் பங்க்குகள் மாற்றப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி பிரிவு டைரக்டர் ராமகுமார் தெரிவித்தார்.


இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன இயக்குனர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) எஸ்.எஸ்.வி.ராமகுமார் கூறியதாவது:
எரிபொருள்களை சுத்திகரிப்பு செய்வதற்காக, பானிபட் மற்றும் பாரதீப் நகரங்களில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரும்பு, மக்காசோளம், நெல், பருத்தி ஆகியவற்றின் சக்கைகளில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்வது வரும் 2025ம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக அதிகரிக்கப்படும்.


அதற்கு ஏற்ற வகையில், தரமான இன்ஜின்களைத் தயாரிக்குமாறு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைக்கவும், மாற்று எரிசக்தியை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.அதன்படி, மின்சார வாகனங்கள் திரவ, இயற்கை எரிவாயுவால் இயங்கக் கூடிய வாகனங்கள் தற்போது அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


இத்தகைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்-கள் பல எரிபொருள் விற்பனை மையங்களாக மாற்றப்படும்.கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படுவதால், அதற்கேற்ப உள்நாட்டில் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. எனவே, சிலிண்டர் விலை உயர்வுக்கு, எண்ணெய் நிறுவ னங்கள் பொறுப்பல்ல. அத்துடன், சிலிண்டருக்கான மானியத்தையும் மத்திய அரசு குறைத்து விட்டது.
இவ்வாறு ராமகுமார் கூறினார்.


நிறுவன இயக்குநர்கள் பி.ஜெயதேவன், கே.சைலேந்திரா, தலைமைப் பொது மேலாளர் ஆர்.சிதம்பரம் உடனிருந்தனர்.சிஎன்ஜி வாயு தயாரிக்கும், விநியோகிக்கும் நிலையங்களை நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனம் நிறுவ உள்ளது. இதன் மூலம் 5,000 தொழில் முனைவோருக்கு வாய்ப்புக் கிடைக்கும். இந்த சிஎன்ஜி வாயுவுடன் ஹைட்ரஜன் வாயுவை கலப்பதால் அதி திறன் கொண்ட சிஎன்ஜி வாயு கிடைப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே அவற்றை உற்பத்தி, விநியோகம் செய்வது குறித்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக உச்ச நீதி மன்றத்தை அணுகியுள்ளோம். அதன் அனுமதி கிடைத்தவுடன் சிஎன்ஜி வாயுவுடன் ஹைட்ரஜன் வாயு கலந்து விநியோகம் செய்யப்படும்.


இந்தியாவில் 90 சதவீத மக்கள் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் 50 சதவீதத்துக்கும் குறைவான உற்பத்திதான் இந்தியாவில் நடக்கிறது. எனவே இந்தியா, பெரும்பாலான எரிவாயுவுக்கு இறக்குமதியை நம்பியே உள்ளது. இதற்கு முன்பு சலுகை விலையில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது. தற்போது அரசின் கொள்கையின் படி, சர்வதேச சந்தை விலையை பொறுத்து விற்கப்படுகிறது. இதனால் விலை மாறுதல் ஏற்படுகிறது என்றார் எஸ்.எஸ்.வி.ராமகுமார்.இந்தியன் ஆயில்ரூ.3200 கோடியில் ஆராய்ச்சி பிரிவு நிறுவுகிறது. அரியானாவில் பரிதாபாத் நகரில் நிறுவப்பட்டு இது 2023ல் ஆராய்ச்சியை துவக்கும்.


இதன் ஆராய்ச்சி தொழில்நுட்பம் ஏற்கனவே செர்பியா நாட்டு நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை இது விற்பனை செய்துள்ளது என்றார் ராமகுமார்.

 

Tags :

Share via