ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 78 நாள் சம்பளம் போனஸ்  

by Editor / 07-10-2021 04:23:12pm
ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 78 நாள் சம்பளம் போனஸ்  

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 78 நாள் சம்பளம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.


உலக அளவில் மிகப்பெரிய ரெயில்வேக்களில் ஒன்றாக இந்திய ரெயில்வே விளங்கி வருகிறது.
மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு போனஸ் வழங்கப்படுகிறது. இது தசரா மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது.


ரெயில்வே ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 78 நாள் சம்பளம், உற்பத்தி சார்ந்த போனசாக வழங்கப்பட்டது. அதைப்போல இந்த ஆண்டும் 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்கும் வகையில் மத்திய அரசுக்கு ரெயில்வே பரிந்துரைத்து இருந்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை உற்பத்தி சார்ந்த போனசாக வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன் மூலம் 11.56 லட்சம் ஊழியர்கள் பலன் அடைவாகள். இதற்காக சுமார் ரூ.1,985 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.


இந்த தகவலை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதைப்போல ஜவுளித்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்திய பூங்கா (பி.எம். மித்ரா) அமைக்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


5 ஆண்டுகளில் ரூ.4,445 கோடி செலவில் பல்வேறு மாநிலங்களில் இந்த மெகா பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
நூற்பு, நெசவு, பதப்படுத்துதல், சாயமிடுதல் மற்றும் அச்சிடுதல் முதல் ஆடை உற்பத்தி வரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி சங்கிலியை உருவாக்க இந்த திட்டம் வாய்ப்பளிக்கும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பின்னர் தெரிவித்தார்.


இந்த பூங்காக்கள் அமைக்க தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, ஆந்திரா உள்பட பல மாநிலங்கள் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

Tags :

Share via