குமரியில் தொடரும் மழை-திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

by Editor / 07-10-2021 07:22:31pm
குமரியில் தொடரும் மழை-திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு


குமரி மாவட்டத்தில் தொடரும் மழையால் அணைகள் வேகமாக நிரம்புகிறது. திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து பாயும் வெள்ள நீரால் சிறுவர் பூங்கா மூழ்கியது. 


குமரி  மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.75 அடி, 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.95 அடியாக உள்ளது. சிற்றாறு முதல் மற்றும் இரண்டாம் அணைகள், கோதையாறு அணை மறுகால் பாய்கின்றன. கோதையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் மோதிரலை- குற்றியாறு ரோட்டில் உள்ள பாலம் மூழ்கியதால் இரண்டு அரசு பஸ்கள் வழியில் சிக்கியது. பின்னர் கோதையாறு மறுகால் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பஸ்கள் புறப்பட்டு சென்றன.

பேச்சிப்பாறையை சுற்றியுள்ள மலையோர கிராமங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் வீடுகளில் முடங்கியுள்ளனர். திற்பரப்பு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இங்குள்ள சிறுவர் பூங்கா மூழ்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பயணிகள் அனுமதிக்கப்படாததால் ரோட்டில் நின்று அருவியை ரசித்து செல்கின்றனர். அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

 

Tags :

Share via