பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by Editor / 10-10-2021 04:25:20pm
பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையால் 4 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய 5 ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியிருப்பதாவது:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளுர் வட்டம், திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும்.

இன்றைய நிலவரப்படி (10 ந் தேதி) நீர் இருப்பு 33.95 அடியாகவும் கொள்ளளவு 2807 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டியில் நீர் வரத்து காலை 6 மணி நிலவரப்படி 1691 கன அடியாக உள்ளது. தற்போது பருவ மழையினால் நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு வரும் நீர் வரத்து 34 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றம் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி நீர்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (10 ந் தேதி) பிற்பகல் 2 மணி அளவில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

எனவே, நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு உள்ளிட்ட 30 கிராமங்களில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo