லக்கிம்பூர் வன்முறை - அஜய் மிஸ்ராவின் மகன்,  ஆசிஷ் மிஸ்ராவை விசாரிக்க அனுமதி

by Editor / 11-10-2021 05:13:42pm
லக்கிம்பூர் வன்முறை - அஜய் மிஸ்ராவின் மகன்,  ஆசிஷ் மிஸ்ராவை விசாரிக்க அனுமதி

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக 12 மணி நேர விசாரணைக்கு பிறகு அக்டோபர் 9ல் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.


உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றியதிலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையிலும் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இது மிகப்பெரிய கொந்தளிப்பையும், அரசியல் புயலையும் கிளப்பியது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தை சந்தித்தனர். இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட கார் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் தொடர்புடையது என்று குற்றம்சாட்டப்பட்டது. அந்த காரில் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர்.


ஆனால் அந்த நேரத்தில் காரில் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது. அத்துடன், கார் மீது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தாக்குதல் நடத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து டிரைவர் அவர்கள் மீது காரை ஏற்றிவிட்டதாகவும் பாஜக தரப்பில் கூறப்பட்டது. காரை விட்டு ஏற்றியவர்களை கைது செய்யாத உத்தரப்பிரதேச அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்க்கச் சென்ற காங்கிரஸ் தலைவர்களை சட்டவிரோதமாக பிடித்துவைத்திருப்பதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் மத்திய உள்துறை இணையமைச்சர் பொறுப்பில் இருந்து அஜய் மிஸ்ரா அகற்றப்படவேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வந்தன.


லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் விசாரணை நடத்துவார் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது வேகமாக வந்த கார் ஏறிச்செல்வதைக் காட்டும் காணொளியை பிரியங்கா காந்தி பகிர்ந்தார். இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பில் உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்ட நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறியது. போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், தற்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.


சனிக்கிழமை லக்கிம்பூர் கேரி போலீஸ் நிலையத்தில் ஆஜரான ஆஷிஷ் மிஸ்ராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது என்றும், அவர் மீது கொலை, கொலை என்று சொல்லமுடியாத மனித இறப்புக்கு காரணமாக அமைதல், கொலைச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின்போது அவர் சரிவர பதில் சொல்லவில்லை; விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார் என்றும் அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்தார். இந்நிலையில் அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் மத்திய அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via