2023ம் ஆண்டில் இந்திய வீரர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டம் இஸ்ரோ அறிவியல் செயலாளர் தகவல்
இந்தியாவின் சார்பில் வருகிற 2023ம் ஆண்டு 4 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவியல் செயலாளர் ஆர்.உமாமகேஷ்வரன் தெரிவித்தார்.
துபாயில் நடந்து வரும் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் நேற்று விண்வெளி வார நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் பல்வேறு நாட்டு அரங்குகளில் அந்தந்த நாடுகளின் விண்வெளி தொழில்நுட்பங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்திய அரங்கிலும் விண்வெளி வார நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ அறிவியல் செயலாளர் டாக்டர் ஆர்.உமாமகேஷ்வரன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக அடுத்த ஆண்டில் (2022) விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்பும் திட்டம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற தொழில்களை போல் அல்லாமல் விண்வெளித்துறையில் கட்டுமானங்கள் மற்றும் கருவிகளை தயாரிக்க நேரடியாக களத்தில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை வீட்டில் இருந்து செய்ய முடியாத நிலை உருவானதால், இஸ்ரோ சார்பில் பல்வேறு உதிரி பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை தொடர்ந்து தயாரிக்க இயலவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் ஆர்வமாக இருந்தார். ஆனால் தற்போது அதனை நாங்கள் தவறவிட்டு விட்டோம். எனவே வருகிற 2023ம் ஆண்டில் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்ப முயற்சி செய்து வருகிறோம்.மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்த திட்டத்தில் ககன்யான் என்ற விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு அதன் மூலம் 4 இந்திய விண்வெளி வீரர்களை 2023-ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் மனிதர்கள் அல்லாத விண்கலன்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமானது 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. ஒன்று வருகிற டிசம்பர் மாதத்திலும், மற்றொன்றை அடுத்த ஆண்டிலும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவின் விண்வெளி திட்டங்களில் அடுத்ததாக சந்திரயான் 3 என்ற விண்கலம் அடுத்த ஆண்டு நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் வீனஸ் கிரகத்தை (வெள்ளி) 4 ஆண்டுகளுக்கு அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து ஆய்வு செய்யும் ‘சுக்ராயன் 1 ஆர்பிட்டர் விண்கலம்’ வருகிற 2024ம் ஆண்டு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Tags :