விவசாயி வங்கிக்கணக்கில் இருந்து நூதன முறையில்1.24 லட்சம் மோசடி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கீழமேடு, கோட்டைக்குளத்தை சேர்ந்தவர் துரைமாணிக்கம் (70) விவசாயி. இவரது மகன் இளங்கோ (49), இவர், பட்டுக்கோட்டை, சாமியார்மடம் பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இளங்கோவனின், செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் நாங்கள் பாங்க் ஆப் பரோடா வங்கியிலிருந்து பேசுகிறோம். உங்கள் பழைய ஏடிஎம் கார்டு காலாவதியானதால், புதியதாக ஏடிஎம் கார்டு தருகிறோம்.
பழைய ஏடிஎம் கார்டு எண் மற்றும் தகவல்களை தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார். உடனே இளங்கோ தனது வங்கி கணக்கு புத்தகத்தை படம் எடுத்து அனுப்பியுள்ளார். அதனை சோதனை செய்து பார்த்த அந்த நபர், உங்களது கணக்கில் குறைவாக பணம் உள்ளது. அதனால் புதிய ஏடிஎம் கார்டை பின்னர் அனுப்புவதாக கூறியுள்ளார். மேலும், உங்களிடம் வேறு வங்கி கணக்கு உள்ளதா என்று கேட்டுள்ளார். ஆனால் இளங்கோ தன்னிடம் ஏடிஎம் இல்லை.
தனது தந்தையிடம் ஏடிஎம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அதற்கு தொலைபேசியில் பேசிய நபர் இளங்கோவின் தந்தை ஏடிஎம் கார்டை புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லி இருக்கிறார். அதன்படி இளங்கோவும் தனது தந்தை துரைமாணிக்கத்தின் பட்டுக்கோட்டை இந்தியன் வங்கி ஏடிஎம் கார்டு தகவல்களை தெரிவித்து புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார். போனில் பேசிய மர்மநபர், உங்களது செல்போனுக்கு OTP எண் வரும் வந்தவுடன் கூறுங்கள் என்றார். அதனை தொடர்ந்து மூன்று முறை வந்த OTP எண் தகவலையும் அந்த மர்மநபர் கேட்டு தெரிந்து கொண்டு, செல்போனை துண்டித்து விட்டார்.
அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் மூன்று தவணையாக 1.24 லட்சம், இளங்கோவனின் தந்தை துரை மாணிக்கத்தின் வங்கி கணக்கிலிருந்த பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்த இளங்கோவும், தந்தை துரைமாணிக்கமும், வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து, இளங்கோ, தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணையும், எங்கிருந்து வந்தது, யார் பேசினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த கும்பல், விவசாயயின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை நுாதன முறையில் திருடப்பட்டது. இது போன்ற செயல்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tags :