‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கினார்
கொரோனா பெருந்தொற்றால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.
சென்னை டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திட்டம் தொடர்பான கையேட்டை வெளியிட்டுப் பேசினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்க தமிழ்நாடு அரசின் புதிய திட்டமான - “இல்லம் தேடிக் கல்வி” என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு “இல்லம் தேடிக் கல்வி” என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்பின்கீழ் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது.கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடியிருந்ததால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனில் எந்தவொரு குறைபாடும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைச் சரிசெய்தல்.
* பள்ளி நேரத்தைத் தவிர, மாணவர்களின் வசிப்பிடம் அருகே, சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்புகளை வழங்குதல்.
* மாணவர்கள் பள்ளிச் சூழலின்கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை “இல்லம் தேடிக் கல்வி” திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல் என வரையறுக்கப்பட்டுள்ளது.
“இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தின்கீழ் பயிற்சிப் பணிமனை, விழிப்புணர்வு கலைப் பயணம் மற்றும் தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்து பேசினார்.இல்லம் தேடிக் கல்வி கையேட்டை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டார்.
Tags :