கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம்

by Editor / 19-10-2021 05:04:54pm
கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம்

கீழடி அகழ்வாராய்ச்சியில் முதல் முறையாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 13ம் தேதி தொடங்கப்பட்டது. இதில், மணலூரில் எதிர்பார்த்த அளவில் பொருட்கள் கிடைக்காததால் அந்த பகுதியை தவிர்த்து இதர மூன்று பகுதிகளிலும் அகழாய்வு பணிகள் தொடரப்பட்டன.


தற்போது அகழாய்வு பணி நிறைவடைந்த நிலையில் அப்பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சூழலில் கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்ற தளத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.


அகழாய்வு நடைபெறும் குழிக்குள் இறங்கி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டார்.


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அகழாய்வு நடைபெற்ற குழிகளை வழக்கம் போல் மூடிவிடாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் திறந்த நிலையில் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், குழிகள் திறந்த நிலையில் வைப்பது இதுவே முதன்முறை என்றும் கட்டுமானங்கள், செங்கல் கட்டுமானங்களை பார்வைக்கு வைத்து பாதுகாக்க தொழில்நுட்ப வசதிகளுக்கு சென்னை ஐஐடி-யின் உதவியை நாட உள்ளதாகவும் கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், 8ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் முதல் முறையாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் கிடைத்துள்ளது. அத்துடன் பஞ்சு மார்க் நாணயமும் கிடைக்கப்பெற்றுள்ளது. கங்கை சமவெளியோடு உள்ள வாணிக தொடர்பை அறிந்துகொள்ளும் வகையில் இந்த பொருட்கள் உள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

 

Tags :

Share via