ராமேஸ்வரத்தில். குவியல் குவியலாக கடல் அட்டை பறிமுதல்
தடை செய்யப்பட்ட கடல் அட்டையை ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து சிலர் கடத்த முயல்வதாகக் கடலோர காவல் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வனசரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் மகேந்திரன் ஆகியோர் மற்றும் இந்தியக் கடலோர காவல்படை கமாண்டர் ஷனோவாஸ், துணை கமாண்டர் மாருதி ஆகியோர் தலைமையில் கூட்டு ரோந்து மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கடல் வழியே கடத்தல்காரர்கள் தப்பிவிடாமல் இருக்க பாக் விரிகுடா பகுதியில் கடலோர காவல் படையினர் களமிறக்கப்பட்டனர். அப்போது மண்டபம் பகுதியில் உள்ள உச்சிப்புளியில் கடல் பகுதியில் கேட்பாரற்று இருந்த நாட்டுப் படகு ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
கடலோர காவல் படையினர் அந்த நாட்டுப்படகில் நடத்திய சோதனையில் 31 பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட இந்த 600 கிலோ கடல் அட்டைகளின் மதிப்பு சுமார் ரூ 3 கோடி வரை இருக்கும் எனக் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த நாட்டுப்படகு கடல் அட்டைகளுடன் மண்டபம் பகுதிக்கு எடுத்து வரப்பட்டது. மேலும், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags :