சுமூகமான உறவை விரும்புகிறோம் - தாலிபான்கள்
உலக நாடுகளுடன் சுமூகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள காத்திருப்பதாக ரஷ்யாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஃப்கானிஸ்தானின் மேம்பாட்டுக்கு உதவ கடந்த 2017-ம் ஆண்டு ரஷ்யா உருவாக்கிய கூட்டமைப்பின் சார்பில், ஆஃப்கானிஸ்தானின் புனரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது.
இதில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 நாடுகளின் பிரதிநிதிகளும், தாலிபான்களின் உயர்மட்ட குழுவினரும் பங்கேற்றனர்.
அண்டை நாடுகளுடன் நட்புடன் இருக்க வேண்டுமென, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நாடுகளின் பிரதிநிகள், தாலிபன்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதற்கு பதிலளித்துள்ள ஆஃப்கானிஸ்தான் இடைக்கால அரசின் துணைப்பிரதமராக உள்ள அப்துல் சலாம் ஹனாஃபி, இந்த பேச்சுவார்த்தையை சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பாக கருதவதாகத் தெரிவித்தார்.
ஆஃப்கானிஸ்தானில் அமைதி மற்றும் மறுவாழ்வை கொண்டு வர தாங்கள் முயற்சித்து வருவதாகவும், உலக நாடுகளுடன் சுமூகமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவே தாங்கள் விரும்புவதாகவும் ஆஃப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி தெரிவித்தார்.
Tags :