கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தொடர்பான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

by Editor / 22-10-2021 04:27:15pm
கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தொடர்பான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை


தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன் தொடர்புடைய 27 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை  சோதனைகளை நடத்தி வருகிறது.


தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநில தலைவராக இருப்பவர் சேலம் ஆர். இளங்கோவன். இவர் அண்ணா திமுகவின் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளராகவும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர்.
சேலம் ஆத்தூருக்கு அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் வீடு உள்பட அவர் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்  சோதனைகளை நடத்தி னர். இந்த சோதனைகள் சேலம், சென்னை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடந்தது. இளங்கோவனும் அவரது மகன் பிரவீன் குமாரும் வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் 3.78 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


2014ஆம் ஆண்டுவாக்கில் 30 லட்ச ரூபாயாக இருந்த இளங்கோவனின் சொத்து மதிப்பு, தற்போது 5.6 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது. அவர் தனது வருமானத்திற்குப் பொருந்தாத வகையில், 131 சதவீதம் அதிக சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்படி கூடுதலாக சம்பாதித்த பணத்தை, கல்வி நிலையங்களில் முதலீடு செய்ததோடு, வேறு சிலர் பெயர்களில் சொத்துகளாக வாங்கியிருப்பதும் தெரிய வந்ததை அடுத்து, சேலத்தில் 17 இடங்கள், திருச்சியில் நான்கு இடங்கள், நாமக்கல் மற்றும் சென்னையில் தலா இரண்டு இடங்களிலும் கரூரில் ஒரு இடத்திலும் இந்த சோதனைகள் நடக்கின்றன. இளங்கோவனின் மகன் பிரவீன் துணைத் தலைவராக உள்ள கல்வி நிறுவனத்திலும் சோதனை நடந்தது.


மேலும், புளியந்தோப்பு கே.பி. பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைக் கட்டிய பிரபல கட்டுமான நிறுவனமான பிஎஸ்டி எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் தென்னரசு வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சேலம் இளங்கோவன் நடத்தி வரும் அறக்கட்டளையில் தென்னரசுவும் உறுப்பினர் என்ற வகையில் இந்த சோதனை நடத்தபட்டது.

 

Tags :

Share via