ஆய்வாளர், எழுத்தாளர் அ. சீனிவாசராகவன்-அக்டோபர் 23
அ. சீ. ரா என அழைக்கப்பட்ட அ. சீனிவாசராகவன் ( அக்டோபர் 23 1905 - ஜனவரி 5 1975) பன்முகத் திறமை கொண்ட தமிழ் எழுத்தாளர். இவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்ற ஆங்கிலப் பேராசிரியராகவும் விளங்கினார். சிறந்த தமிழ்க் கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், இலக்கியவாதி, மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டிருந்தார். சாகித்ய அகாதமி விருது முதன் முதலாக தமிழ்க்கவிதைக்காக வழங்கப்பட்டது.
அ. சீ. ராவின் கவிதைக்குத்தான். ” நாணல்’ என்பது அவரது புனைபெயர்.இவர் தன் பெயரை அ.சீநிவாச ராகவன் என்றே எழுதிவந்தார். கல்கி, அமுதசுரபி கலைமகள் போன்ற பத்திரிகைகளில் நிறைய எழுதியிருக்கிறார். கல்கி பத்திரிகையில் அவர் எழுதிய இலக்கியச் செல்வம் என்னும் தொடர், குருதேவரின் குரல் என்னும் தொடர் இரண்டும் பெரும் வரவேற்பைப் பெற்றன. மாகாகவி தாகூரின் பாடல்களை மேக்மில்லன் நிறுவனத்திற்காகக் கவியரசர் கண்ட கவிதை என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். தாருதத்தின் ஆங்கிலக் கவிதைகள், வால்ட் விட்மனின் லீவ்ஸ் ஆஃப் கிராஸ் என்னும் புத்தகத்திலிருந்து சில கவிதைகள், டென்னிஸன், ஃபிரான்ஸிஸ் தாம்ஸன், இராபர்ட் பிரௌனிங் ஆகியோரின் கவிதைகள் சிலவற்றையும் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
தஞ்சை மாவட்டம், கண்டியூரில், 1905 அக்., 23ம் தேதி பிறந்தவர், அ.சீனிவாச ராகவன். திருச்சி புனித ஜோசப், பாளையங்கோட்டை புனித சேவியர், நெல்லை ஹிந்து, சென்னை விவேகானந்தா கல்லுாரிகளில், ஆங்கிலத் துறை விரிவுரையாளர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றினார். பின், துாத்துக்குடி வ.உ.சி., கல்லுாரி முதல்வராகவும் பணியாற்றினார். 'சிந்தனை' மாத இதழின் ஆசிரியராகவும், 'திரிவேணி' என்னும் ஆங்கிலப் பத்திரிகைக்கு உதவியாசிரியராகவும் இருந்தார்.மார்கழி முப்பது நாளும், வானொலியில் அவரின் திருப்பாவை, திருவெம்பாவை சொற்பொழிவுகள், பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டன. இவர் எழுதிய, 'வெள்ளைப்பறவை' கவிதை நுாலுக்கு, 1968ல், 'சாகித்ய அகாடமி' பரிசு கிடைத்தது. தமிழ்க் கவிதைக்கு அளிக்கப்பட்ட, முதல் சாகித்ய அகாடமி பரிசு அது தான். 1975 ஜன., 5ம் தேதி, தன், 69வது வயதில் இயற்கை எய்தினார்.
Tags :