பணகுடி அருகே வனப்பகுதியில் யானை மர்மச்சாவு

by Editor / 22-10-2021 06:45:49pm
பணகுடி அருகே வனப்பகுதியில் யானை மர்மச்சாவு

 

நெல்லை மாவட்டம் பணகுடி குத்தர பாஞ்சன் அருவியின் அருகாமையிலுள்ள கஞ்சித் தோப்பு வனப்பகுதியில் நேற்று யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. வனத்துறையினர் தலைமையில் கால்நடைத்துறையினரால் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு பின் அடக்கம் செய்யப்பட்டது.

பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ள கஞ்சித் தோப்பு வனப்பகுதியில்  வனத்துறையை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசவே அங்கு வனப்பணியாளர்கள் விரைந்து சென்று பார்த்த போது யானை ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக பூதப்பாண்டி வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா ரேஞ்சர் திலீபன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் கால்நடைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த யானையினை கால்நடைத்துறை டாக்டர். மனோகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் போஸ்ட் மார்ட்டம் செய்தனர். அதில் இறந்த ஆண் யானைக்கு 13 வயது எனவும் சம்பவம் நடந்து இரு நாட்களாகி இருக்கலாம் எனவும் தெரிய வந்தது. மேலும் யானையின் தும்பிக்கை மற்றும் அதன் பின் பகுதி மிகவும் சேதமடைந்து காணப்பட்டதால் அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் இறந்த யானை ஜே.சி.பி.மூலம் அடக்கம் செய்யப்பட்டது.

 

Tags :

Share via