கருகலைப்பு  மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பெண் பலியான விவகாரத்தில் மருத்துவர் உட்பட 3 பேர் கைது

by Editor / 07-11-2023 12:03:37am
கருகலைப்பு  மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பெண் பலியான விவகாரத்தில் மருத்துவர் உட்பட 3 பேர் கைது

 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் கரைமேட்டு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரமணா (23). இவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தாரணி (4) என்ற மகளும், ஹரிபிரசாத் (2) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் 3வது முறையாக ரமணா கர்ப்பமடைந்தார்.


7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்த ரமணா, தா பழுவூரில் தனியார் கிளினிக் நடத்தி வரும் ராமச்சந்திரன் மனைவி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் தேன்மொழியை நாடியுள்ளார். மருத்துவர் தேன்மொழி கொடுத்த மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 30ம் தேதி ரமணாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து உறவினர்கள் ரமணாவை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டதால் அவரது வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் தெரிய வந்ததால் சிசுவை ஆப்ரேசன் மூலமாக டாக்டர்கள் அகற்றினர்

இதற்கிடையே ரமணாவின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரமணா உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் மருத்துவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு மாத கருவை கலைக்க மாத்திரை கொடுத்த மருத்துவர் தேன்மொழி, செவிலியர் சக்தி தேவி, உதவியாளர் வெற்றி செல்வி ஆகியோர் அரியலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags : மருத்துவர் உட்பட 3 பேர் கைது

Share via