பருவமழை -கலெக்டர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் வரும் 26 ந் தேதி செவ்வாய்க்கிழமை, வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் 26 ந் தேதி அன்று மழை முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுடன் 26 ந் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
ஏற்கனவே மழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தயார் நிலையில் இருக்கும்படி கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி, சீரமைப்பு, தூர்வாரும் பணிகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக எந்தவித உயிரிழப்பும் இருக்க கூடாது; சேதமும் இருக்க கூடாது என்பதில் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதால் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாறப்பட்டு வருகின்றன.
சென்னையில் மழைநீர் கால்வாய்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.
கண்காணிப்பு அதிகாரிகள்
அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர்களுடன் இணைந்து செயலாற்ற உள்ளனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 26-ந்தேதி தலைமை செயலகத்தில் இருந்தபடி மாவட்ட கலெக்டர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் காணொலி வாயிலாகவும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் இப்போது பெய்த மழையால் 90 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2, 3 மாதங்களுக்கு வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் அதற்கேற்ப முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக என்னென்ன முன்எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் பேரிடர் துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அணைக்கு அதிக அளவு தண்ணீர் வந்தால் எந்தவிதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.தாழ்வான பகுதி மற்றும் ஆற்றங்கரை ஓரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.படகுகள், தாழ்வான பகுதி மற்றும் சுரங்கப் பாதைகளில் தண்ணீரை வெளியேற்ற சக்தி வாய்ந்த ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு வசதியாக மையங்கள், முதலுதவி சிகிச்சை அளிக்க வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் வரும் 26 ந் தேதி அன்று மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி மேலும் பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
Tags :