மதுரை ஜவுளிக்கடையின் 5வது மாடியிலிருந்து தவறிவிழுந்த 7 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

by Editor / 02-11-2021 07:50:07pm
மதுரை ஜவுளிக்கடையின் 5வது மாடியிலிருந்து தவறிவிழுந்த 7 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மதுரை எஸ்.எஸ்.காலனி அருகேயுள்ள வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் இவருடைய மனைவி மற்றும் 7வயது மகன் நித்திஸ் தீனா ஆகியோர் இன்று மதுரை அழகப்பன் நகரில்  அமைந்துள்ள பிரபல ஜவுளிக்கடையில் தீபாவளி பண்டிகைக்காக துணி எடுக்க சென்றுள்ளனர். துணிகளை வாங்கிவிட்டு 5வது மாடியில் இருந்து எஸ்கலேட்டர் வழியாக இருவரும் இறங்க முயன்றபோது எஸ்கலேட்டர் அருகில் இருந்த இடைவெளியில் திடீரென சிறுவன் சென்றதால் அங்கிருந்து தவறி விழுந்து 5வது மாடியிலிருந்து இருந்த கீழே விழுந்துள்ளான்.

அடுத்தடுத்து மாடிகளில் உள்ள கல்தூண்களில் சிறுவனின் தலை மோதியதில்  தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு  அதிகளவிற்கு ரத்தம் வெளியேறியது. இதில் சிறுவன் மயக்கமடைந்து  உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில்  கடையில் இருந்த எஸ்கலேட்டர் அருகில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி தடுப்புகள் உரிய முறையில் இல்லாத காரணத்தால்தான் குழந்தை தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிறுவன் உயிருக்கு போராடிவரும் நிலையில், கடை நிர்வாகமோ எந்தவித பதட்டமும் இன்றி தொடர்ந்து பொதுமக்களை வியாபாரத்திற்கு அனுமதித்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையம்  எழுந்துள்ளது.

 

Tags :

Share via