தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக புகார்: பொதுப்பணி துறை பெண் அதிகாரி வீட்டில் 1.25 கோடி பறிமுதல்: வேலூர், ஓசூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

by Editor / 03-11-2021 11:53:45pm
தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக புகார்: பொதுப்பணி துறை பெண் அதிகாரி வீட்டில் 1.25 கோடி பறிமுதல்: வேலூர், ஓசூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

வேலூர்: வேலூர் பொதுப்பணி துறை பெண் செயற்பொறியாளர், தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை, வேலூர் மற்றும் ஓசூரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் இருந்து ₹1.25 கோடியை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணி துறையின் கீழ் வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளது. இந்த மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் என அனைத்து அரசு கல்லூரிகளின் கட்டிடங்கள் கட்டுமான பணியை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இந்த அலுவலகத்தின் செயற்பொறியாளராக ஷோபனா (57) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், தீபாவளி பண்டிகையையொட்டி கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூல் செய்து வருவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் விஜிலென்ஸ் டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜனி, விஜயலட்சுமி ஆகியோர் நேற்றிரவு 10 மணியளவில் செயற்பொறியாளர் ஷோபனாவை கண்காணிக்க தொடங்கினர். அப்போது தொரப்பாடி-அரியூர் சாலையில் உள்ள ரெஸ்ட்ரான்ட் வெளியே அரசு காரில் சென்று கொண்டிருந்த அவரை விஜிலென்ஸ் போலீசார் மடக்கி சோதனை செய்தனர். காரில் ₹5 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ‘பணம் என்னுடையது இல்லை’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் ₹5 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து உடனடியாக மாவட்ட ஆய்வுக்குழு துணை அலுவலர் முருகன் அளித்த புகாரின் பேரில் விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இன்று அதிகாலை தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ஷோபனா தங்கியுள்ள வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அங்கு கட்டுக்கட்டாக இருந்த 15.85 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.4 லட்சம் மதிப்பிலான 3 காசோலைகள், 18 ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள ஷோபனாவின் வீட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு நடத்தினர். இதில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வேலூர், ஓசூர் என இரு இடங்களிலும் மொத்தம் 1.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

''தொடரும் ரெய்டு''
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 18 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக ஆவின், ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, வருவாய் துறை, பத்திர பதிவு துறை, உள்ளாட்சி தணிக்கை, நெடுஞ்சாலை துறை, பேரூராட்சிகள், வணிக வரித்துறை, வட்டார போக்குவரத்து செக்போஸ்ட், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய துறைகளின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து ரெய்டு நடத்தி வரும் நிலையிலும், அதிகாரிகள் தீபாவளி வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. இதேபோல் வசூல் வேட்டையில் ஈடுபட்ட பெண் செயற்பொறியாளர் வீட்டிலும் போலீசார் இன்று சோதனை நடத்தி 25 லட்சத்தை பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது....

தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக புகார்: பொதுப்பணி துறை பெண் அதிகாரி வீட்டில் 1.25 கோடி பறிமுதல்: வேலூர், ஓசூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
 

Tags :

Share via