சத் பூஜை பக்தர்கள் வழிபாடு
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வட மாநிலங்களில் சத் பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாக சத் பூஜை விழாவானது 4 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சத் பூஜை விழா கடந்த திங்கள் கிழமை முதல் தொடங்கியது. இந்த நிலையில் சத் பூஜையில் 4 ஆம் நாள் நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு பீகார் மாநிலம் பாட்னா-வில் உள்ள காலேஜ் காட்டில் மக்கள் சூரிய கடவுளுக்கு படையல் வைத்து வழிபட்டனர். இதேபோல் பாடிபுல் காட் என்ற இடத்தில் கங்கை நதிக்கரையில் ஏராளமான மக்கள் சத் பூஜையை கொண்டாடினர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஹடானியா தலாப் என்ற இடத்தில் நதிக்கரையில் பக்தர்கள் முழங்கால் அளவு நீரில் நின்றபடி சூரிய பகவானை வழிபட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் குர்லா பகுதியில் உள்ள செயற்கை குளத்தில் சத் பூஜையின் நிறைவு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சூர்ய பகவானுக்கு சிறப்பு படையல் வைத்து ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
டெல்லியில், யமுனை நதி கரையில் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு பக்தர்கள் சூரிய பகவானுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். யமுனையில் நச்சு நுரை படலத்துக்கு இடையே பக்தர்கள் சூரியனை வழிபட்டனர்.
Tags :