நெல்லையில் தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நெல்லை டவுனில் உள்ள தனியார் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மாணவர்கள் சம்பவ இடத்திலும் மேலும் ஒரு மாணவர் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் பள்ளியில் காலை 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டுள்ளது. அப்போது கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காவல்துறை, வருவாய் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்தில் இடிந்து விழுந்தவுடன் ஆங்காங்கே அனைவரும் சிதறி ஓடியுள்ளனர். அனைத்து மாணவர்களையும் வகுப்பறைக்கு வர சொல்லி யார் இல்லை என்பது குறித்து கணக்கெடுக்க கூடிய பணியை பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைவேளை விடப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். தற்போது 8 மற்றும் 9ஆம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :