திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை கொலை செய்த டாக்சி டிரைவர்
மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் ஷபிகுல் இஸ்லாம். டாக்சி டிரைவரான இவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஷபிகுல் இஸ்லாம் தற்போது தனது மூன்றாவது மனைவியுடன் அரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், ஷபிகுலுக்கு அதே பகுதியில் வசித்து வந்த 25 வயதான நர்ஹிஸ் ஹடூன் என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடவைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதியன்று பால் வாங்க சென்ற நர்ஹிஸ் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த நர்ஹிஸின் தந்தை தனது மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் நர்ஹிஸ் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், நர்ஹிஸ் கடைசியாக ஒரு டாக்சியில் ஏறிச்சென்றது தெரியவந்தது.
அந்த டாக்சி எண் முதற்கொண்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் அந்த டாக்சியை ஷபிகுல் இஸ்லாம் ஓட்டிச்சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஷபிகுல் இஸ்லாம் போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் வங்காளதேசத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் பதுங்கி இருந்த இஸ்லாம் ஷபிகுல்லை குருகிரான் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஷபிகுல்லிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஷபிகுல் இஸ்லாமுக்கு ஏற்கனவே 3 முறை திருமணமானது தெரியவந்தது. மேலும், இளம்பெண்ணான நர்ஹிஸ் ஹடூனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷபிகுல் கேட்டுள்ளார்.
ஆனால், தன்னை திருமணம் செய்வதற்கு நர்ஹிஸ் மறுத்ததையடுத்து அவரை கொலை செய்ததுவிட்டு குருகிராமில் இருந்து மேற்குவங்காளத்திற்கு வந்துவிட்டதாக போலீசாரிடம் ஷபிகுல் இஸ்லாம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஷபிகுலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :