பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரயில் நிலையத்தில் ஆய்வுபயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

by Editor / 27-12-2021 10:06:26pm
 பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரயில் நிலையத்தில் ஆய்வுபயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் மிகவும் முக்கியமான ரயில் நிலையமாக இருப்பது நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் இங்கே தினசரி ஆறுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் நின்று செல்லும் மற்றும் அதிக அளவில் மக்கள் பயன்பெறும் இந்த ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவறை குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான பணிகள் இன்னும் செய்து முடிக்காமல் இருப்பதால் ரயில் பயணிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தைக் குமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு வந்த ரயில் பயணிகளிடம் அவர்கள் குறைகளைக் கேட்டறிந்து ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவதாக உறுதியளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் எந்த ஒரு அடிப்படை வசதியையும் இல்லாமல் உள்ளது இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் அனைத்து விதமான ரயில்களும் இங்கு நிற்க வேண்டும் என்றும் ஏற்கனவே சாலை மற்றும் ரயில் நிலையங்கள் குறித்து பல்வேறு கோரிக்கை மனுக்களைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தூய்மை இந்தியா திட்டம் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதாகவும் அதனை முழுமையாகச் செயல்படுத்த வில்லை எனவும் தெரிவித்து அவர் அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமெனக்  கேட்டுக்கொண்டார். நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை என்றும் அவர்கள் அவர்களுக்குத் தேவையான சட்டங்களைக் கொண்டுவந்து விவாதம் செய்யாமல் அவர்களாகவே செயல்படுத்தி உள்ளனர் எனக் குற்றம்சாட்டி அவர் ரயில் நிலையங்களைத் தனியார் மயமாக்கும் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

 

Tags :

Share via