வருவாயைப் பெருக்க பொதுமக்களிடம் புதிய யோசனைகளை கேட்கிறது மதுரை ரயில்வே கோட்டம்
உலக அளவில் பெரிய நிறுவனமான இந்திய ரயில்வேக்கு பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்குவதன் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. மேலும் ரயில் கட்டணம் இல்லாத வருவாயாக ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் விளம்பரம் செய்ய அனுமதி வழங்கி வருவாய் ஈட்டப்படுகிறது. வேறு பல புதிய உத்திகளும் கையாளப்பட்டு வருகிறது. உதாரணமாக தற்போது ரயில் நிலையத்தில் மின்னணு வீடியோ திரை, கண்காட்சி அரங்கு மற்றும் ரயில் பெட்டிகளின் உட்புறம் வெளிப்புறம் ஆகியவற்றில் விளம்பரங்கள் செய்வதை குறிப்பிடலாம். இந்த மாதிரியான கட்டணமில்லாத வருவாயைப் அதிகரிக்க பொதுமக்களிடமிருந்து புதிய யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்காக மதுரை கோட்ட நிர்வாகம் போட்டி ஒன்றை நடத்துகிறது. தேர்ந்தெடுக்கப்படும் முதல் 10 யோசனைகளுக்கு சிறப்பு பரிசுகள் உண்டு. இந்த யோசனைகளை பொதுமக்களில் தனிநபர், நிறுவனங்கள், மாணவர்கள் யார் வேண்டுமானாலும் வழங்கலாம். எத்தனை யோசனைகள் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். ஒரு விண்ணப்பத்தில் ஒரு யோசனை மட்டுமே தெரிவிக்க முடியும். இதற்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பங்களை மதுரை கோட்ட ரயில்வே அலுவலக வர்த்தக பிரிவில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது
https://sr.indianrailways.gov.in/Tender_cpp.jsp?lang=0&id=0,3 இணையதள முகவரியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை ஜனவரி 17 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மதுரை கோட்ட ரயில்வே அலுவலக வர்த்தகப் பிரிவிலோ அல்லது innovativeideasforrly@gmail.com என்ற இணையதள முகவரியிலோ சமர்ப்பிக்கலாம்.
Tags :