தமிழக டி.ஜி.பி.யின் அறிக்கையை வரவேற்கிறேன் - அண்ணாமலை

by Admin / 03-01-2022 04:44:05pm
தமிழக டி.ஜி.பி.யின் அறிக்கையை வரவேற்கிறேன் - அண்ணாமலை

   
ராகுல் கன்னியாகுமரி, கேரளா வந்தால் கிறிஸ்தவராகி விடுவார். உ.பி ராஜஸ்தான் போனால் இந்துத்வா பற்றி பேசுவார். ஆனால் பா.ஜ.க மத சார்பற்ற அரசு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் கொண்ட கட்சி என அண்ணாமலை கூறியுள்ளார்.

பாரதிய ஜனதாவில் சிறுபான்மையினர் இணையும் விழா நாகர்கோவிலில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார்.ஜாபர்சேட் வரவேற்றார். 

எம்.எல்.ஏக்கள் எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், தோவாளை உள்நாட்டு மீனவர் சங்க தலைவர் சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் வாழ்த்துரை வழங்கினார்.
 
விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது
ராகுல் கன்னியாகுமரி, கேரளா வந்தால் கிறிஸ்தவராகி விடுவார். 

உ.பி ராஜஸ்தான் போனால் இந்துத்வா பற்றி பேசுவார். ஆனால் பா.ஜ.க மத சார்பற்ற அரசு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் கொண்ட கட்சி.

20 ஆண்டுகளுக்கு பின்பு நம் நாட்டின் பிரதமர் போப் பிரான்சிசை சந்தித்து 60 நிமிடம் பேசியிருக்கிறார். மோடிக்கு முன்பாக போப் ஜாண்பாலை சந்தித்தது அன்றைய பிரதமர் வாஜ்பாய். 

அனைத்து இஸ்லாமிய நாடுகளும் பிரதமருக்கு விருது வழங்குகிறது. அந்தந்த நாட்டில் குடியுரிமை இல்லாத கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம்தான் சி.ஏ.ஏ.

அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் 5 ஆண்டில் 40 ஆயிரம் கோடி திடங்களை கொண்டுவந்தார். அவர் கொண்டு வந்த நான்குவழிச்சாலைத் திட்டம் மண் இல்லை என்ற காரணத்துக்காக கிடப்பில் போடும் நிலை உள்ளது.

இந்தியாவில் 75 ஆண்டுகளாக மீன்வள அமைச்சகம் இல்லாமல் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி மீன்வளத்துறை அமைச்சகம் கொண்டுவந்து தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனை அமைச்சராக நியமித்துள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் எவ்வளவு பிரச்னை இருந்தது. 2014க்கு பிறகு ஆளுமை மிகுந்த அரசு இந்திய மீனவர் மீது கைவைத்தால் பதிலடி வேற மாதிரி இருக்கும் என இலங்கைக்கு தெரியும். 15 மீனவர்கள் பிடிக்கப்பட்டபோது அதில் 13 பேர் கிறிஸ்தவர்கள். 21 நாளில் அவர்களை மீட்டுக்கொண்டு வந்தபோது பா.ஜ.க நேரில் சென்று வரவேற்றது. 69 மீனவர்கள் இலங்கை கடற்படையில் சிக்கியுள்ளனர். அவர்களை சேதாரம் இல்லாமல் மீட்டு வருவோம்“ என்றார்.

பின்னர் அண்ணாமலை அளித்த பேட்டியில், “ஒவ்வொரு மாநிலத்துக்கும் கட்டம் கட்டமாக பேரிடர் நிவாரண நிதி வழங்குகிறோம். டிசம்பர் 31-ந் தேதி 3331 கோடி ரூபாய் மே 2021 வரை நடந்த பேரிடருக்காக 6 மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

அதன் பிறகு நடந்த பேரிடர்களுக்கு அடுத்த கட்டத்தில் நிவாரணம் வழங்கப்படும். தமிழகத்துக்கு மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதமும் பேரிடர் நிதி வழங்கப்படுகிறது. மாநில அரசு 300 கோடி ஒதுக்குவதற்கு முன்பு மத்திய அரசு வழங்கிவிட்டது.

பாரத பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் டெல்டா பகுதியில் ஒரு விவசாயி கூட பணம் வரவில்லை என சொல்ல முடியாது. பிரதமர் மோடி வந்த பிறகு டெல்டா பகுதியில் 100 சதவீதம் பயிர்காப்பீட்டில் வருகிறது. பா.ஜ.கவின் 24 பேர் மீது தி.மு.கவினர் புகார் கொடுத்து கைது செய்கிறார்கள். 

தமிழக போலீசுக்கு என கம்பீரம் இருக்கிறது. அந்த கம்பீரத்தை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காதீர்கள் என டி.ஜி.பியிடம் கேட்டுக் கொண்டேன். அதனால்தான் தமிழக போலீசார் கடமை தவறாமல் செயல் படவேண்டும் என டி.ஜி.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். டி.ஜி.பியின் அறிக்கையை வரவேற்கிறேன்” என்றார்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ் மற்றும் நிர்வாகி கள் கலந்து கொண்டனர். 
 

 

Tags :

Share via