பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் இளைஞர்கள் மீது தாக்குதல் - பெரும் பரபரப்பு.
பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் போதை ஆசாமிகள் சிலர் கட்சிக்கொடியை தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞர்களை வழிமறித்த தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து கொடியை தள்ளி விட்டவர்கள் மன்னிப்பு கேட்டனர்.
கொடி என்பது மிகவும் முக்கியமானது. தேசியக்கொடிக்கு எந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறோமோ அதுபோல அரசியல் கட்சியினர் தங்களின் கட்சிக்கொடிக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். அந்த கொடியை அவமானப்படுத்தும் வகையில் யாரேனும் நடந்து கொண்டால் பொங்கி விடுவார்கள் அரசியல் கட்சியினர். கரூரில் பாஜக கொடியை அவமானப்படுத்தும் வகையில் தள்ளி விட்ட இளைஞர்கள் சிலரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட பாஜக வின் புதிய அலுவலக திறப்பு விழா கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கட்சி அலுவலகத்திற்குள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் வழி நெடுக பாஜக கட்சி கொடி நடப்பட்டிருந்தது. அப்போது நெடுஞ்சாலை வழியாக அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் பாஜக கட்சி கொடியினை தட்டிவிட்டு சென்றதாகவும் இதில் கொடி கீழே விழுந்து சாய்ததாகவும் தெரிகிறது. இதனைப் பார்த்து பாஜக தொண்டர்கள் கொதிப்படைந்தனர்.
அப்போது புதிய கட்சி அலுவலகத்தின் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கூடி இருந்தனர். கட்சிக் கொடியை தட்டிவிட்டு வந்த காரை கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர். கூச்சலிட்ட தொண்டர்கள் கட்சிக் கொடியை தட்டிவிட்டு வந்த இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சில தொண்டர்கள் கொடியை தட்டிவிட்ட இளைஞர் ஒருவரை தாக்கிய நிகழ்வும் நடந்தது. இதனால் பெரிய அளவில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அப்போது அங்கிருந்த காவல்துறையினர் பாஜகவினரை சமாதானப்படுத்தினர். எனினும் பாஜக தொண்டர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சில மணிநேரங்கள் ஆனது.
காவல்துறையினர் இளைஞர்களை அழைத்து பேசியதில், போதையில் இருந்ததால் தெரியாமல் செய்ததாகவும், தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதன்பிறகு இரு தரப்பினரிடையே காவல்துறையினர் சுமுகமாகப் பேசி அனுப்பி வைத்தனர்.
Tags :