ஜாமினில் வெளிவந்த ராஜேந்திரபாலாஜியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் - நடந்தது என்ன?
ஜாமீன் வாங்கி கொண்டு வீட்டில் இருக்கும் ராஜேந்திர பாலாஜியை 4 முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து உள்ளனர். இதுதான் அதிமுக வட்டாரத்தில் தற்போது பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
போலீசுக்கே தண்ணி காட்டி வந்த நிலையில், பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைதானார். சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதனால், கடந்த 13-ந்தேதி விடுதலை செய்யப்பட்டார். சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வீட்டில் இப்போதைக்கு தங்கி உள்ளார்.
தான் சிறையில் இருந்தபோது, தன்னை அதிமுக தரப்பில் யாருமே வந்து சந்திக்கவில்லை என்றும், பாஜக நிர்வாகிகள் செய்த உதவியைகூட அதிமுகவில் தனக்கு யாருமே செய்யவில்லை என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ராஜேந்திர பாலாஜி புலம்பியதாக செய்திகள் கசிந்தன . மேலும் ஓபிஎஸ்ஸுக்கு ராஜேந்திர பாலாஜி போன் போட்டதாகவும், ஆனால், அந்த போனை ஓபிஎஸ் அட்டண்ட் செய்யவில்லை என்றும் சொல்லப்பட்டன.
இப்படிப்பட்ட சூழலில்தான், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார். சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜேந்திரபாலாஜியின் வீட்டுக்கு திடீரென நேற்று சாயங்காலம் சென்றுள்ளனர்.. அவர்கள் அனைவரையும் ராஜேந்திரபாலாஜி சால்வை அணிவித்து வரவேற்றிருக்கிறார்.
பிறகு வீட்டிற்குள் சென்ற அவர்கள் ராஜேந்திரபாலாஜியிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார்கள்.. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.. பிறகு அனைவருமே அவரவர் காரில் கிளம்பி சென்று விட்டார்களாம்.. இந்த சந்திப்பு எதிர்பாராத வகையில் திடீரென நடைபெற்றதாக அதிமுக நிர்வாகிகள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள், எதற்கான சந்திப்பு இது என்பது உறுதியாக தெரியவில்லை.
ஆனால், ராஜேந்திர பாலாஜியிடம் மாஜிக்கள் ஆறுதல் சொன்னார்களாம். 'நாங்க இருக்கோம். பயப்பட வேண்டாம். கடைசி வரை உங்களுக்காக போராடுவோம். ஆனால், தயவுசெய்து ஓடி ஒளியாதீங்க. அது நம்ம கட்சிக்குதான் கெட்ட பெயரை தரும். நம்ம கட்சிக்கு இது போதாத காலம். நாம அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்கள். பிறகு மெல்ல மெல்ல, டிராக்கை வேறு ரூட்டில் திருப்பி, 'நாங்களும் இதே நிலைமையில் தான் இருக்கிறோம். எந்த நேரத்தில் எங்களுக்கும் இப்படியான செய்தி வருமோ? எப்படி சமாளிக்க போறோமே' என்று பயத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதை கேட்ட ராஜேந்திர பாலாஜி, 'முதல்ல யாரும் பயப்படாதீங்க. பிரச்சனை வரும்போது நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று முன்னாள் அமைச்சர்களுக்கே தெம்பூட்டி அனுப்பி வைத்தாராம். ஆனாலும் இவர்கள் ஏன் ராஜேந்திர பாலாஜியை சந்தித்தனர்? எடப்பாடி, மற்றும் ஓபிஎஸ் இருவரும் என்ன நினைக்கிறார்கள்? என்பது பற்றிய தகவல்கள் இதுவரை இல்லை. ஆனால், ராஜேந்திர பாலாஜியின் ஆட்டம் இனிமேல்தான் இருக்கும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
Tags :