தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாராம்பரிய நெல் வகைகளை பட்டதாரி பெண் பயிர் செய்து சாதனை

by Admin / 20-01-2022 02:57:04pm
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாராம்பரிய நெல் வகைகளை பட்டதாரி பெண் பயிர் செய்து சாதனை

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை தனது கணவர் சரவணன் உதவியுடன் தேடிச்சென்று 1,250 நெல் ரகங்களை கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார்.
 
பழங்காலம் முதல் இந்தியாவில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததாகவும், தற்போது அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ரகங்களை காண முடிகிறது. 

தன் வாழ்நாளில் தன்னால் முடிந்த அளவு தொலைந்து போன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உறுதியுடன் உள்ளதாகவும் சிவரஞ்சனி தெரிவித்தார்.

மேலும் அசாம், ஒரிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது தேடலை விரிவுபடுத்தி இலுப்பைப்பூ சம்பா, கருங்குருவை, மடுமுழுங்கி, நவரா, பால்குட வாழை, வெள்ள குடவாழை, செம்புலி பிரியன், கடற்பாலி உள்ளிட்ட 1,250 தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு 3 ஏக்கர் வயலில் ஒவ்வொரு நெல் ரகங்களையும் 40 சதுரஅடி என்ற அளவில் அவற்றை பயிரிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது அவைகள் நன்றாக கதிர் விட்டு உள்ளது. இதனை அறுவடை செய்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல்லாக வழங்குவதாக கூறினார்.

தங்க தம்பா, சொர்ணமுகி, சொர்ணமல்லி, வாடன் சம்பா, புழுதிக்கார், செங்கல்பட்டு, சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும், ஊட்டச்சத்துக்களையும் உடைய நெல் ரகங்களையும் பயிரிட்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாராம்பரிய நெல் வகைகளை இவர் பயிர் செய்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியமான நெல் ரகங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதே எனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via