ஆந்திராவில் புதிய ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு - அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசு ஊழியர்கள், பல மாதங்களாக தங்களது ஊதியத்தை அதிகரிக்க கோரி முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து, ஆந்திராவில் அரசுத் துறையில் அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர் வரை, பணியாற்றி வரும் லட்சக்கணக்கானோரின் சம்பள விகிதம், ஒய்வூதியர் பங்களிப்பு, அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறித்து ஜெகன் மோகன் ரெட்டி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பிறகு 11வது ஊதிய திருத்த ஆணையத்தின் ஆலோசனைபடி அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை 23 சதவீதமாக உயர்த்தி முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் 11வது ஊதிய திருத்த ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்துவதற்கு, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக தலைநகர் அமராவதியில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில் மாநில அரசின் ஊதிய உயர்வு உத்தரவுக்கு எதிராக வரும் 7-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் கூறுகையில், இந்த ஊதிய உயர்வு உத்தரவை திரும்ப பெற வேண்டும் அல்லது நிறுத்தி வைக்க வேண்டும். இல்லை என்றால் வரும் 25-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகள் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இந்த போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் 5ம் தேதி ஒத்துழையாமை இயக்கமாகவும் அதனை தொடர்ந்து 7ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டமாகவும் மாற்றம் அடையும் என்று தெரிவித்துள்ளார்.
Tags :