வெடிகுண்டு வைத்து கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

by Admin / 18-02-2022 12:21:36pm
வெடிகுண்டு வைத்து கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பெரம்பலூர் மாவட்டம், அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள்(74), இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். 

மகன் மற்றும் மகளுக்கு திருமணம் செய்து வைத்த முத்தம்மாள் தனியாக வீடு கட்டி  வசித்து வந்தார்.

தன்னை கவனிக்காத இளைய மகன் செல்வகுமாரை தவிர மற்ற மகன்கள் மற்றும் மகள்களுக்கு சொத்துக்களை முத்தம்மாள் எழுதி வைத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் தாயை கொல்ல முடிவு செய்து பெட்டி வெடிகுண்டு ஒன்றை தயாரித்து முத்தம்மாள் வீட்டில் வைத்துள்ளார்.

கடந்த 2016 ஜனவரி 21ம் தேதி வயல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு வந்த முத்தம்மாள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த பெட்டியை திறந்த போது அது வெடித்து படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த வி.களத்தூர் போலீசார் செல்வகுமார் அவரது நண்பர்கள் பூபதி, சரவணன், லூகாஸ் அந்தோணி, பால்டப்பா(என்ற)மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
 
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட செல்வகுமார் மீது குற்றச்சாட்டுகள்  நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூபதி, சரவணன், மணிகண்டன் ஆகியோரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போது லூகாஸ் என்பவர் இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via