மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை: முதல்வருக்கு மருத்துவர் சங்கங்கள் நன்றி

by Editor / 13-05-2021 07:33:30am
மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை: முதல்வருக்கு மருத்துவர் சங்கங்கள் நன்றி

கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமும், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையும் அறிவிக்கப்பட்டதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை;

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் செந்தில்: கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரமும், மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரமும், பட்டமேற்படிப்பு மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கரோனா காலத்தில் பணியாற்றி இன்னுயிர் நீத்த 43 மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை பதவியேற்ற சில நாட்களிலேயே நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை: மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையும், உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமும் அறிவிக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இருப்பினும் கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க ஆவன செய்ய வேண்டும்.

தமிழக மருத்துவ சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் ரவிக்குமார்: கரோனா தடுப்பு பணியின்போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி.

 

Tags :

Share via