எதிர்க் கட்சிகள் விமர்சனம்
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.நா.பாதுகாப்பு சபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. எனினும் ரஷியா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோற்கடித்தது
ஐ.நா.வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, தேசங்கள் ஒதுங்கி நிற்காமல் எழுந்து நிற்க வேண்டிய ஒரு காலம் வரும் என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருக்க வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன், நண்பர்கள் தவறு செய்யும் போது அதை நாம் எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் எதிரொலித்துள்ளார்.
படையெடுப்பு என்பது படையெடுப்புதான் என்றும், நாம் நமது நண்பரான ரஷ்யாவிடம் இதை சொல்ல வேண்டும்.
நண்பர்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக பேச முடியாவிட்டால், நட்பின் மதிப்பு என்ன? வாக்களிக்காததற்குப் பிறகு, இந்தியா தன்னை வரலாற்றின் தவறான பக்கத்தில் நிறுத்தி விட்டதாக பலர் வருந்துகிறார்கள். இவ்வாறு சசிதரூர் தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பெயரை துஷ்பிரயோகம் செய்வதையும் விமர்சிப்பதையும் நிறுத்த முடியாதவர்கள், ஐ.நா.வில் தங்கள் நிலையை நியாயப்படுத்த அணி சேராக் கொள்கையைப் பயன்படுத்துகின்றனர் என்று, சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசு கபட நாடகம் போடுவதாகவும், போருக்கு எதிராக வாக்களிப்பதைத் தவிர்ப்பது, உங்கள் உறவை மேம்படுத்தாது என்றும் கூறியுள்ளார்.
(உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல்) ஒரு படையெடுப்பு. ரஷ்யா-இந்தியா உறவுகள், நுணுக்கங்கள் எதுவாக இருந்தாலும், அது என்னவாக இருந்தாலும் இந்தியா அதனுடன் பேச வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மொஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
Tags :