57 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

by Admin / 01-03-2022 01:20:05pm
57 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. பஞ்சாப், கோவா, உத்தர காண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

மணிப்பூரில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முதல்கட்ட தேர்தல் நடந்தது. அடுத்தகட்ட தேர்தல் 5-ந்தேதி நடைபெற உள்ளது.

403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 5 கட்ட ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. 6-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் (3-ந் தேதி) நடைபெறுகிறது.

அம்பேத்கர்நகர், கோரக்பூர், பலராம்பூர், சித்தார்த்நகர், பாஸ்டி, சான்ட்கபீர் நகர், மகராஜ் கஞ்ச், குஷிநகர், டோரியா, பாலியா ஆகிய 10 மாவட்டங்களுக்குட்பட்ட 57 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

தேர்தலையொட்டி அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. பா.ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். 3-ந்தேதி காலை 7 மணிக்கு 57 தொகுதிகளி லும் ஓட்டுப்பதிவு தொடங்கு கிறது.

தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

6-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 65 பெண் வேட்பாளர்கள் உள்பட 670 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

7-ந்தேதி இறுதிக்கட்டமாக 7-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. 10-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

 

Tags :

Share via