நேட்டோ மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்பு

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் விவகாரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா, நேட்டோ அமைப்பு ஆதரவாக உள்ளன.
போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பெல்ஜியம் நாட்டு தலைநகர் பிரஸ்சல்சுக்கு சென்றடைந்தார்.
இன்று நடைபெறும் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜோபைடன் பங்கேற்கிறார். மேலும் ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டிலும் கலந்து கொள்கிறார்.
இந்த உச்சி மாநாடுகளில் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
நேட்டோ பொதுச்செயலாளர் ஸ்டோல்டன் பெர்க் கூறும்போது, “நேட்டோ தலைவர்கள் பங்கேற்கும் அவசர கால உச்சி மாநாட்டில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளை குவிக்க ஒப்புதல் அளிக்கப்படலாம்.
சுலோவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு நான்கு புதிய போர்க்கால குழுக்கள் அனுப்பப்படும்” என்றார்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன் நாளை போலந்து நாட்டுக்கு செல்ல உள்ளார். அங்கு போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
உக்ரைன் - ரஷியா இடையே போர் பதட்டம் நிலவி வரும் சூழ்நிலையில் ஜோபைடனின் ஐரோப்பா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags :