உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களுக்கு அழைப்பு ரஷ்யா மருத்துவ பல்கலைக்கழகங்கள்

by Staff / 28-03-2022 11:01:34am
உக்ரைனில்  மருத்துவம் படித்து வந்த மாணவர்களுக்கு அழைப்பு  ரஷ்யா மருத்துவ பல்கலைக்கழகங்கள்

உக்ரைன் நாட்டு பல்கலைக்கழகங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படித்து வந்தனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலையடுத்து அவர்கள் அனைவரும் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர். 

உயிருடன் மீண்டாலும், படிப்பைத் தொடர்வது குறித்த அச்சம் அவர்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இது தொடர்பாக எந்த ஒரு நாடும் மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இதுவரை ஏதும் சொல்லவில்லை.

இந்தநிலையில் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த  இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழகங்கள் உதவ முன்வந்துள்ளன.
 
படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் நடப்பு செமஸ்டருக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று கூறியுள்ளன. மேலும், முதலாமாண்டு, 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தடையின்றி படிப்பைத் தொடர ஏதுவாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் உறுதி அளித்துள்ளன.

அத்துடன் கிரீமியா, கஜகஸ்தான், ஜார்ஜியா, ஆர்மேனியா, பெலாரஸ், போலந்து நாடுகளும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. உக்ரைனில் மருத்துவம் படித்து இந்தியா திரும்பியுள்ள 16 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளின் அழைப்புகள் அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை விளக்கேற்றி வைத்துள்ளது.
 

 

Tags :

Share via