தமிழகத்துக்கு குறைவாக தடுப்பூசி ஒதுக்கீடு மத்திய அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி 

by Editor / 24-05-2021 07:20:21pm
தமிழகத்துக்கு குறைவாக தடுப்பூசி ஒதுக்கீடு மத்திய அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி 



தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி ஒதுக்கீடு செய்ததாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 35 ஆயிரத்தைக் கடந்து தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. 
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் உள்ளிட்ட தேவைகள் குறித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்துக்கு குறைவான அளவு  தடுப்பூசி ஒதுக்கீடு செய்ததாக மத்திய அரசு மீது நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 
தொடர்ந்து, தடுப்பூசி ஒதுக்கீட்டு அளவை மறு ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், தடுப்பூசி போடுவது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினர்.  இதற்கு பதிலளித்த  மத்திய அரசு  2021 இறுதிக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்தது.
மேலும், யாஸ் புயலால் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் சப்ளை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர். வழக்கு விசாரணையை மே 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

 

Tags :

Share via