3 வது முறையாக இன்று குற்றாலம் பேரூராட்சி தலைவர் துணைத்தலைவர் தேர்தல்

by Editor / 25-05-2022 08:23:28am
3 வது முறையாக இன்று குற்றாலம் பேரூராட்சி தலைவர் துணைத்தலைவர்  தேர்தல்

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் இன்று 25.05.2022  தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலும் நாளை  26.05.2022 அன்று மேல்முறையீடு குழு தேர்தலும் நடைபெற உள்ளது.

குற்றாலம் பேரூராட்சியில் தேர்தல் நடைபெற்று பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும்  தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று  25.05.2022  தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலும் நாளை  26.05.2022 அன்று  மேல் முறையீடு குழு தேர்தல் நேற்று நடைபெறும் என  அறிவிக்கப் பட்டுள்ளது.

குற்றாலம் பேரூராட்சியில்  திமுக சார்பில் போட்டியிட்டு  முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் கே.பி.குமார் பாண்டியன், இரா.கிருஷ்ணராஜா, கு.கோகிலா, ஸ்ரீ கீதா குமாரி ஆகிய 4 பேர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

குற்றாலம் பேரூராட்சி தேர்தலில்  அதிமுக சார்பில்  கவுன்சிலர்களாக முன்னாள் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் எம்.கணேஷ் தாமோதரன், மற்றும் அதிமுக உறுப்பினர்கள்  க.தங்கப்பாண்டியன், ம.மாரியம்மாள், சி.ஜெயா ஆகிய  4 பேர்களும்  வெற்றி பெற்றுள்ளனர்.


இந்நிலையில் குற்றாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இரண்டு முறை அறிவிக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்த போதும் திமுக உறுப்பினர்கள் நான்கு பேர்களும் தேர்தலில் பங்கெடுக்க வராத காரணத்தினால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

 மேலும்  இவர்கள் மேல்முறையீடு குழு தேர்தலிலும்  கலந்து கொள்ளாமல்  புறக்கணிப்பு செய்தனர். இதனால் தேவையான மெஜாரிட்டி இல்லாத காரணத்தினால் மேல்முறையீடு  தேர்தலையும் ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். 

இந்நிலையில் இன்று தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலும் நாளை 26.05.2022 அன்று மேல்முறையீடு குழு தேர்தலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மட்டுமன்றி நாளை  மேல்முறையீடு தேர்தலும் நடைபெறுமா? என்பது  கேள்விக்குறியாகவே உள்ளது. 

குற்றாலம் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறாமல் இருப்பதால் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தடைபட்டுள்ளது. மேலும்  குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, மாதங்கள் சீசன் காலமாகும் அதற்கு முன்பாக குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி, உள்ளிட்ட அருவிப் பகுதிகள் மட்டுமன்றி பேரூராட்சி  தங்கும் அறைகள், சுற்றுச்சூழல் பூங்கா, நீச்சல் குளம், உள்ளிட்ட பகுதிகளை சீரமைக்கவும். குற்றாலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்வதற்கு ஏற்றவகையில்  பேரூராட்சி  தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். 

எனவே இதற்கு திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் சுமூக முடிவினை எடுக்க வேண்டும் என்று குற்றாலம் பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், குற்றாலம் வர்த்தக சங்க நிர்வாகிகள், மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் பல்வேறு தடைகளையும் தாண்டி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றாலும் அந்தத் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்பதை  அறிந்து கொள்ள குற்றாலம் பேரூராட்சி பகுதி பொதுமக்கள் மட்டுமன்றி, தென்காசி மாவட்ட பொதுமக்கள் மட்டுமன்றி தமிழகம் முழுவதுமுள்ள பொதுமக்களும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

 

Tags : Courtallam mayoral election for the 3rd time today

Share via