ரயில்களில் லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணம்

by Staff / 03-06-2022 04:31:48pm
ரயில்களில் லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணம்

ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.ரயில்களில் அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்துச் சென்றால் அபராதம் விதிக்க வகை செய்யும் விதிமுறை கடந்த 30 வருடங்களாக அமலில் உள்ளது.இருந்தாலும் அது தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்பதால் அளவில் பெரிதான சூட்கேஸ்கள், மூட்டைகளை பல பயணிகள் எடுத்து வந்து ரயில் பெட்டிகளில் அடைக்கின்றனர். இதனால் ஒரே ஒரு பெட்டியுடன் பயணிக்கும் சாதாரண பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலாக லக்கேஜ் எடுத்துச் செல்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.அதாவது ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ வரையும், ஏசி2-டயர் படுக்கை, முதல் வகுப்பில் 50 கிலோ வரையும், ஏசி3-டயர் படுக்கை, ஏசி இருக்கை 40 கிலோ வரையும், இரண்டாம் வகுப்பில் 40 கிலோ வரையும் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பொது வகுப்பில் பயணிப்பவர்கள் வெறும் 25 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த கூடுதல் லக்கேஜுக்கான புக்கிங்கை ரயில் புறப்பாட்டுக்கு 30 நிமிடங்கள் முன்னர் வரையில் லக்கேஜ் புக்கிங் அலுவலகத்தில் பயணிகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போதும் பயணிகள் லக்கேஜுக்கு கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் பயணிகள் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்வது உறுதியானால் கூடுதல் எடைக்கான அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என்றும் இது அந்த எடைக்கான கட்டணத்தை காட்டிலும் ஆறு மடங்கு கூடுதலாக இருக்கும் எனவும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூடுதல் லக்கேஜுக்கான குறைந்த பட்ச கட்டணம் 30 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 

 

Tags :

Share via