முதல்வர் அதிரடி - மாணவ-மாணவிகள் புகாருக்கு தனி ஹெல்ப் லைன் !

by Editor / 27-05-2021 10:42:30am
முதல்வர் அதிரடி - மாணவ-மாணவிகள் புகாருக்கு தனி ஹெல்ப் லைன் !

இணைய வழி வகுப்புகள் இனி பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி, மாணவிகள் புகார் அளிக்க ஹெல்ப் லைன் உருவாக்க அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்வதற்கு முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார் . இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் , சட்டபூர்வமான நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் என்றும் , மற்ற பள்ளி , கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்குப் பின்வரும் முடிவுகளையும் , உத்தரவுகளையும் முதல்வர் அறிவித்துள்ளார் .

இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்தப் பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும் . இப்பதிவினைச் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும் .

இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஆணையர் , கல்லூரிக் கல்வி இயக்குநர் , கணினி குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள் , கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் .

க்குழு , மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதைத் தடுப்பதற்கு உரிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கவும் இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தினார் . இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , மாணவ , மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு ' ஹெல்ப்லைன் ' எண் உருவாக்கவும் முதல்வர் அறிவுறுத்தினார் .

 

Tags :

Share via