வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி டொமினிகாவில் எப்படி பிடிபட்டார்?

by Editor / 27-05-2021 12:09:53pm
வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி டொமினிகாவில் எப்படி பிடிபட்டார்?

டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் 2010இல் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பதிவு செய்யப்பட்ட மெஹுல் சோக்ஸியின் படம் இது

இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கடன் மோசடியில் தேடப்பட்டு வந்த பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, டொமினிகா என்ற கரீபிய நாட்டில் பிடிபட்டார். அவர் ஆன்டிகுவா தேச குடியரிமை பெற்றுள்ள நிலையில், அவரை இந்தியாவுக்கே நாடு கடத்துமாறு ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டின் பிரதமர் காஸ்டன் ப்ரெளன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஸ்டன் ப்ரெளன், "தங்களுடைய தீவில் இருந்து தப்பிச் சென்று மிகப்பெரிய தவறை மெஹுல் சோக்ஸி செய்து விட்டார். அவரை எங்களிடம் ஒப்படைக்காமல் நேரடியாக இந்தியாவுக்கே நாடு கடத்துமாறு ஆன்டிகுவா அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். அவரை நாங்கள் திருப்பி ஏற்கப் போவதில்லை," என்று தெரிவித்தார்.

ஆன்டிகுவா நாட்டில் 2018ஆம் ஆண்டு முதல் மெகுல் சோக்சி வசித்து வருகிறார். முதலீட்டாளர் திட்டத்தின்படி அவருக்கு ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டிலும் குடியுரிமை உள்ளது. ஆனால், ஆன்டிகுவா அளித்த சட்டபூர்வ வசதி டொனிகாவில் மெஹுல் சோக்ஸிக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே, மெஹுல் சோக்ஸி பிடிபட்டது குறித்து கருத்து தெரிவித்த டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள், "ஆன்டிகுவாவில் இருந்து தப்பிய விவகாரம், மெஹுலை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோருவதற்கான தங்களுடைய சட்ட வாய்ப்புகளை வலுப்படுத்தியிருக்கிறது," என்றனர்.

எப்படி தொடங்கியது பிரச்னை?

இந்தியாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,600 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் வைர வியாபாரி நீரவ் மோதியுடன் சேர்த்து மெஹுல் சோக்ஸியும் தேடப்பட்டு வருகிறார். இதில் நீர்வ மோதி லண்டனுக்கு தப்பிச் சென்ற நிலையில், அங்கு அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடுமாறு அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அதில் அரசுக்கு சாதகமாக முடிவு வந்த நிலையில், மேல்முறையீடு வாய்ப்பு உள்ளதால் தொடர்ந்து லண்டன் சிறையிலேயே நீரவ் மோதி அடைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை,மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று அங்கு 2018ஆம் ஆண்டு முதல் வசிக்கத் தொடங்கினார். இதனால் அவரை தேடப்படும் நபராக அறிவிக்க இந்தியாவின் சிபிஐ கேட்டுக் கொண்டதால் அவருக்கு எதிரான மஞ்சள் நிற தேடப்படும் நபர் என்ற அறிவிப்பை இன்டர்போல் வெளியிட்டுள்ளது. ஆன்டிகுவா நீதிமன்றத்திலும் மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துமாறு இந்திய அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, இன்டர்போல் அறிவிப்பின்படி, மெஹுல் சோக்ஸி எந்தவொரு நாட்டின் விமான நிலையம் அல்லது துறைமுகத்துக்கு வந்தாலோ அல்லது நாட்டின் பிற பகுதிகளில் பிடிபட்டாலோ அவரை பிடித்து இன்டர்போலிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த நிலையில்தான் ஆன்டிகுவாவில் தனக்கு எதிரான விசாரணை வளையத்தை சிபிஐ விசாரித்து வருவதை அறிந்து மெஹுல், டொமினிகாவுக்கு நேற்று முன்தினம் இரவு தப்பிச் சென்ற போது இன்டர்போல் அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளார். ஆன்டிகுவாவில் இருந்து படகு மூலமாக அவர் டொமினிகாவுக்கு தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், அவர் ஆன்டிகுவாவில் இருந்து தப்பிய மறு தினமே அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மெஹுல் சோக்ஸி காணாமல் போனதாக அவரது வழக்கறிஞர் மூலம் அரசுக்கு தகவல் கொடுத்தனர். இதுவே இப்போது மெஹுல் சோக்ஸியை கண்காணித்து பிடிக்க காரணமாகியிருக்கிறது.

டொமினிகாவில் மெஹுல் சோக்ஸி குடியுரிமை பெறாதவர் என்பதால் அவரை நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் எந்வித சட்ட சிக்கலும் இருக்காது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via