கழகத்தை வழிநடத்த வாருங்கள் என்று ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு இறந்த பின்னர், அதிமுக பலகட்ட இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்து, தற்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரட்டைத் தலைமையில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் வருகிற 23ந்தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை எவ்வாறு நடத்துவது, என்னென்ன தீர்மானங்களை கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை தேவை ன்று வலியுறுத்தினர். இதன்காரணமாக அதிமுகவிற்குள் மீண்டும் குழப்பமான சூழ்நிலை நிலவத் தொடங்கியுள்ளது. பன்னீர்செல்வனத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் அதிமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என்று அதிமுகவினர் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டிப்பட்டி நகரில் அதி-முக நிர்வாகிகள் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டியில் "அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் பாதுகாவலரே, ஒற்றைத் தலைமை ஏற்று கழகத்தை வழிநடத்த வாருங்கள்" என்று அச்சிடப்பட்டு இருந்தது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவரது சொந்தமாவட்டமான தேனி மாவட்டத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவது அதிமுகவில் பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.
Tags :