பிரதமரை காக்கவைத்த மம்தா : மேற்கு வங்க தலைமைச் செயலாளர்  மத்திய அரசு பணிக்கு மாற்றம்

by Editor / 30-06-2021 04:23:01pm
பிரதமரை காக்கவைத்த மம்தா : மேற்கு வங்க தலைமைச் செயலாளர்  மத்திய அரசு பணிக்கு மாற்றம்



மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் ஆலன் பந்தோபத்யாய் திடீரென மத்திய அரசுப் பணிக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேற்று பயணம் மேற்கொண்டார். முதலில் ஒடிசா சென்ற அவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் பிரதமர் மோடி மேற்குவங்கம் சென்றார். விமானம் மூலம் புயல் பாதிப்புகளை பிரதமர் நேரடியாக கண்டறிந்த பிறகு மேற்குவங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்குபெற மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டு இருந்தார்.
 இதனால் அதிருப்தியடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தார். பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்காக அரைமணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது. மம்தா மட்டுமின்றி மேற்குவங்க மாநில அதிகாரிகளும் தாமதமாகவே வந்தனர்.
பின்னர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்காமல் தனியாக பிரதமரை 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்து பேசி விட்டு ஆலோசனைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார். பிரதமரிடம் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவை என மனுவை அளித்து விட்டு, தனக்கு வேறு பணிகள் இருப்பதாக கூறி புறப்பட்டுச் சென்றார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகி வருகிறது. மம்தா பானர்ஜியின் செயல்பாட்டுக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீன் தன்கார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பண்டாபாத்யாயாவை உடனடியாக டெல்லியில் உள்ள பணியாளர் மற்றும் பயற்சித் துறைக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via