சுதந்திர ரயில் நிலைய வார விழா வாஞ்சி மணியாச்சியில் துவங்கியது
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக கடந்த ஓராண்டாக இந்தியா முழுவதும் சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களை நினைவுபடுத்தும் வகையில் "சுதந்திர ரயில் நிலையம் மற்றும் ரயில்" என்ற விழா நடைபெற இருக்கிறது. மதுரை கோட்டத்தில் சுதந்திர போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட ரயில் நிலையம் வாஞ்சி மணியாச்சி ஆகும். இந்த ரயில் நிலையத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான சுதந்திரப் போரில் கலெக்டர் ஆஷ் துரை என்பவரை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற மணியாச்சி ரயில் நிலையம் 1988 ஆம் ஆண்டு வாஞ்சி மணியாச்சி என பெயர் மாற்றம் பெற்றது. இந்த ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர போராட்ட நிகழ்வை போற்றும் வகையில் விழா நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.எனவே வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் ஜூலை 23 வரை சுதந்திர சின்னம் வார விழா அனுசரிக்கப்பட இருக்கிறது. இந்த வார விழாவின் துவக்க விழா ஜூலை 18 திங்கட்கிழமை அன்று மணியாச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழாவை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் துவக்கி வைத்தார். வாஞ்சிநாதன் அவர்கள் பற்றிய புகைப்படக் கண்காட்சியை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இளைய சகோதரரின் மகன் ஹரிஹரசுப்ரமணியம் திறந்து வைத்தார். மதுரை ரயில்வே சாரண, சாரணியர் வாஞ்சிநாதன் பற்றி மைம் நாடகம், தேசபக்தி பாடல்களுடன் கூடிய ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆகியவை நடைபேற்றன. தமிழ் கவிதை புகழஞ்சலி செலுத்தப்பட்டது. வாஞ்சிநாதன் அவர்களின் இளைய சகோதரருடைய மகன் ஹரிஹரசுப்பிரமணியம் மற்றும் அவரது மகன் நெல்லை பள்ளி ஆசிரியர் வாஞ்சிநாதன் ஆகியோர் கோட்ட ரயில்வே மேலாளருடன் செல்பி பாயின்டில் படம் எடுத்துக் கொண்டனர். விழாவில் முதுநிலைக்கோட்டை தொலைத் தொடர்பு பொறியாளர் ராம் பிரசாத், கோட்ட பாதுகாப்பு ஆணையர் வி.ஜே.பி. அன்பரசு, உதவி கோட்ட ஊழியர்கள் அதிகாரி மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags : The Independence Railway Station Week started at Wanji Maniachi