"தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும்" நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

by Editor / 02-06-2021 11:24:42am

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "மதுரையில் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் எல்லாமே பற்றாக்குறையாக இருந்தது, தற்போது தடுப்பூசியை தவிர அனைத்தும் கட்டுபாட்டுக்குள் உள்ளது.

கொரோனா தொற்று குறைய தொடங்கியது இயற்கையாக நடக்கவில்லை. மதுரையில் விஞ்ஞான ரீதியாக திட்டமிட்ட தடுப்பு நடவடிக்கையால் கொரோனா குறைய தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில், கொரோனா தொற்று புறநகரில் பரவி இருந்தால், சமாளிக்க முடியாத அளவிற்கு நிலைமை கையை மீறி சென்று இருக்கும். மதுரை மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து பணியாற்றினார்கள். மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனாவை மிக வேகமாக கட்டுப்படுத்த முடியும்.

தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. ஒன்றிய அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசியை கொண்டு வர தமிழக அரசு சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நிரந்தரமாக மருந்து தயாரிப்பு ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளோம். மாநிலங்கள் எல்லாம் ஒன்றிணைந்தது தான் மத்திய அரசு. மத்திய அரசு எல்லா மாநிலங்களையும் கட்சி பாகுபாடின்றி பார்க்க வேண்டும்.

மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என ஜனநாயகத்தில் சட்டம் இருக்கு. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என அரசியல் செய்ய கூடாது. அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு ஒரே மாதிரியாக சமமாக பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories