விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை: உயர் நீதிமன்றம்!

by Editor / 02-06-2021 11:20:37am
விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை: உயர் நீதிமன்றம்!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த 2018-ம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்ற கண்டன போராட்டம் நடைபெற்றது.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்கள் மீது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட 4 பேர், ஜுன் 7-ம் தேதி ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனுக்கு தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் கோரி 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முத்தரசன், பாலகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வாதிட்டார்.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, "அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை என்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதான வழக்குகளை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via