தமிழ்நாடு புத்தொழில் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

by Editor / 02-08-2022 01:35:24pm
தமிழ்நாடு புத்தொழில் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.அப்போது புத்தொழில் ஆதார நிதி வழங்குதல், தொழில் முடுக்ககங்கள், புத்தொழில் சமூகக் குழுக்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.வட்டார புத்தொழில் மையங்கள் திறந்து வைத்து, தொழில்காப்பகங்கள் தரவரிசை வழிமுறை வரைவையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்வில் சிறு-குறு தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:நிகழ்ச்சிக்கு மாணவர்கள் வருகிறார்களா? என அமைச்சரிடம் நிகழ்ச்சிக்கு வரும்போது கேட்டேன். அவர்கள் வந்துள்ளது மகிழ்ச்சி. நான் முதல்வன் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இதனை கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.
எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய வகையில் உன்னத நோக்கோடு திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்துத் துறைகளும் முன்னோக்கிய பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது.

தொழில்புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலில் 14 ஆம் இடத்திலிருந்து 3 ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறோம். தொழில்நுட்ப மாநாடு, புத்தாக்க மாநாடு என இந்த ஆண்டு இறுதியில் 2 மிகப்பெரிய மாநாடுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இளைய தலைமுறையினர் புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்த வட்டார புத்தொழில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர். தடை அதை உடை. அனைத்து புத்தொழில் காப்பகங்களையும் உலகத் தரத்திற்கு உயர்த்துவதே நோக்கமாக இருக்க வேண்டும்.

25,000 சதுர அடியில் ஐடி என் ஹப் அமைப்பதற்கான ஆரம்பகட்டப்பணிகள் தொடங்கியுள்ளன. நந்தனத்தில் புத்தொழில் மையம் 3 மாதத்தில் செயல்படத் தொடங்கும்.புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை விரைவில் வெளியிடப்படும். 6 முதலீட்டு மாநாடுகளை நடத்தியுள்ளோம். திட்டங்களை அனைத்துத் துறை அமைச்சர்களும் வாரம்தோறும் கண்காணிக்க வேண்டும். தொய்விருந்தால் முடுக்கிவிட வேண்டும். அதைத்தான் நான் மேற்கொண்டிருக்கிறேன். அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

 

Tags : Tamil Nadu Chief Minister M. K. Stalin inaugurated the Tamil Nadu Innovation Centre.

Share via