ரயில்வேயில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா

by Editor / 11-08-2022 04:40:04pm
ரயில்வேயில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா

75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரயில்வே துறையில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. மதுரை கோட்ட ரயில் இயக்கத்துறையில் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் பணியாற்றுகின்றனர்.  அவர்களில் இரு ரயில் நிலைய அதிகாரிகள், ஒரு ரயில் மேலாளர், ஒரு ஆவண காப்பாளர், 16 பாயிண்ட்ஸ் மேன் ஆகியோர் ராணுவ சீருடையில் அணிவகுப்பு நடத்தினர். 
கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் முன்னாள் ராணுவ வீரர்களின் சேவைகளை பாராட்டி பதக்கம் வழங்கி கௌரவித்தார். விழாவில் முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், கோட்ட ரயில் இயக்க மேலாளர் சபரிஸ் குமார், மஸ்தூர் யூனியன் கோட்டச் செயலாளர்  ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். விழாவில் கோட்ட ரயில்வே மேலாளர் அனந்த் பேசும்போது, இந்த ராணுவ ஒழுக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் நான் ராணுவத்தில் சேர விரும்பினேன். ஆனால் ரயில்வேயில் பணி கிடைத்து  விட்டது. பின்பு ரயில்வேயில் உள்ள பிராந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போது கர்னலாக பதவி வகித்து வருகிறேன். ரயில்வே துறையில் முன்னாள் ராணுவ வீரர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். பணியில் பல்வேறு ரயில்வே கேட்டுகளை ஆய்வு செய்தபோது அங்கு பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கேட்டுகளை சிறப்பாக பராமரித்து சுறுசுறுப்பாக தொய்வில்லாமல் பணியாற்றி வருவதை காணும் போது பெருமையாக இருக்கிறது. உங்கள் சீரிய பணி தொடர வேண்டும் என வாழ்த்தினார்.முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களது பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மாணிக்கம் அவர்களின் மனைவி அலுவலக கண்காணிப்பாளர் மல்லிகா பேசும் போது போரில் தலைவரை இழந்து தவித்த எங்கள் குடும்பத்திற்கு அரசு பணி வழங்கிய ரயில்வே நிர்வாகத்திற்கு என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்றார்.

ரயில்வேயில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா
 

Tags :

Share via